விழாக்காலம் போல… இது அரசு வேலைக்காக நடைபெறும் டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காலம்.

ஆம், புத்தாண்டின் தொடக்கத்தில் குரூப்-2 தேர்வு, பிப்ரவரி மாதம் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வர இருக்கிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழக அரசுப்பணிக்கான தேர்வுகள் அணி வகுத்து நிற்கிறது.

வேலை தேடும் இளம் தலைமுறையினரே, உங்களது திறமையை வெளிப்படுத்தி, உங்களை இந்த உலகத்திற்கு யாரென்று தெரிவிக்க, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த அரசு அலுவலர் யார் என்று உலகிற்கு அறிவிக்க, தங்கத்  தருணம் உங்களைத் தழுவ வருகிறது.

காத்திருக்கும் வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் தான் வாழ்க்கை இருக்கிறது. வாருங்கள், வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் அரசு வேலைக்கனவை நனவாக்கி வெற்றிபெறலாம்.

இதற்கு முதற்படியாக, வரலாறு படித்தால், வரலாறு படைக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கக் கூடிய கேள்விகளில் வரலாறு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. வரலாறு பகுதியில் இடம்பெறும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் முக்கிய தகவல்கள் இந்தத்தொடரில் இடம்பெறுகிறது.

நமது வீட்டைப் பற்றி, நமது பெற்றோர் மற்றும் முன்னோர்களைப் பற்றி யாரும் விவரம் கேட்டால் சளைக்காமல், சலிக்காமல் பேசுகிறோம். மனப்பாடம் ஏதும் செய்யாமலேயே அனைத்துப் பெயர்களையும், வருடங்களையும் கூறுகிறோம். இது நமது ரத்தத்திலேயே ஊறியுள்ளது.

அது வீட்டு வரலாறு என்றால்…
இது நாட்டு வரலாறு.

அதே போன்ற மனநிலையுடன், இதனையும் ஈடுபாட்டு உணர்வுடன், உப்புடன் கலந்துவிட்ட தண்ணீராய் கரைந்துபோய் படியுங்கள், வெற்றி நிச்சயம் தேடிவரும்.

வரலாறு

1. முதல் உயிரினம் தோன்றியது: கடலில்

2. பூமி தோன்றியது: 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

3. மனிதன் தோன்றியது: 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

4. வேளாண்மை தோன்றியது: 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

5. நகரங்களின் தோற்றம்: 4,700 ஆண்டுகளுக்கு முன்பு

வரலாற்றினை வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

வரலாற்றுக் காலம்:- அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களான இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுக்கள் செப்புப்பட்டயங்கள் போன்ற ஆதாரங்கள் கொண்ட காலம் வரலாற்றுக் காலம்.

வரலாற்றுக்கு முந்தைய காலம்:- எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் கற்கள், மரங்கள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள் போன்றவை மட்டுமே அக்கால மக்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாகக் கிடைத்த காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம்.

இக்காலத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

பழைய கற்காலம்   (கி.மு.10 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு): நெருப்பு கண்டு பிடித்தது.

புதிய கற்காலம் (கி.மு.10 ஆயிரம் முதல் கி.மு.4 ஆயிரம் வரை): சக்கரம் கண்டு பிடித்தது.

செம்புக்கற்காலம் (கி.மு.3000-  கி.மு.1500): சிந்துவெளி நாகரிகக்காலம்
இரும்புக்காலம் (கி.மு.1500-கி.மு.600): வேத காலம்)

இந்திய வரலாறு

இந்திய வரலாற்றை, வட இந்திய  வரலாறு தென்னிந்திய வரலாறு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

வட இந்திய வரலாறு

இதில் முக்கியமானது சிந்துவெளி நாகரிகக்காலம் ஆகும். அதுபற்றி காணலாம்.

சிந்துவெளி நாகரிகக்காலம்

சிந்துவெளி நாகரிகம் செம்புக்காலமாகும். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களைக் கொண்டது.

ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் வாழ்ந்த காலம் கி.மு.3250 முதல்         கி.மு.2750 வரை (500 ஆண்டுகள்)

ஹரப்பா

ஹரப்பா தோண்டியெடுக்கப்பட்ட ஆண்டு 1921. கண்டுபிடித்தவர் தொல் பொருள் நிபுணர் ஜான் மார்ஷல்.

‘ஹரப்பா’ என்றால் ‘புதையுண்டவர் களின் நகரம்’ எனப்பொருள்படும்.

ஹரப்பா, ராவி நதிக்கரையில் (தற்போது இந்த இடம் பாகிஸ்தானில்) உள்ளது.

இந்தியாவின் மிகப்பழமையான  நகரம் ஹரப்பா.

மொகஞ்சதாரோ

மொகஞ்சதாரோ தோண்டியெடுக்கப்பட்ட ஆண்டு 1922.

‘மொகஞ்சதாரோ’ என்றால் ‘இடுகாட்டு மேடு’ என்று பொருள்படும்.

மொகஞ்சதாரோ சிந்து மாகாணத்தில் லர்கானா மாவட்டத்தில் (தற்போது இந்த இடம் பாகிஸ்தானில்) உள்ளது.

சிறப்பம்சங்கள்:- சுட்ட செங்கற்களால் வீடுகள், கிணறுகள், தனிக்குளியலறை, சமையலறை, பாதாளக் கழிவுநீர்க் குழாய்கள், பொதுக்குளம், துணி மாற்றும் அறைகள், தானியக்களஞ்சியம் போன்றவை.

சிந்துவெளிக் கருவிகள் கிடைத்த இடங்கள்:- சான்குதாரோ, காளிபங்கன், குஜராத்தில் லோத்தல் துறைமுகம்.

வணங்கிய தெய்வங்கள்:- பசுபதி என்ற சிவன், பெண் தெய்வம், லிங்கம், மரம், சூலம்.

ஆரியர் காலம் (வேத காலம்)

வேத காலத்தினை முன் வேதகாலம் (அ) ரிக் வேதகாலம் (கி.மு.1500-கி.மு.1000) என்றும் பின்வேத காலம் (கி.மு.1000- கி.மு.600) என்றும் பிரிக்கலாம்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் சப்தசிந்து என்ற பகுதியில் முதலில் (கி.மு.1500-கி.மு.1000) குடியேறினர்.

ஆரியர்கள் சமுதாய அமைப்பு: குடும்பம் ரீ கிராமம் ரீ விஸ் ரீ ஜனா ரீ ஜனபதா என அமைந்தது.

‘ஜனா’ என்பது மன்னரையும் (அரசன்), ‘மகா ஜனபதம்’ என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசையும் குறிக்கிறது.

முன் வேத காலத்தில் புகழ்பெற்ற பெண்மணிகள்:- விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா.

பின் வேத காலத்தில் (கி.மு.1000- கி.மு.600) புகழ்பெற்ற பெண்மணிகள்:-
கார்க்கி, மைத்ரேயி.

முன்வேத கால மக்கள் வணங்கிய தெய்வங்கள்:-
வானம், சூரியன், காற்று, மரம், நெருப்பு, இந்திரன், வருணன், அக்னி, எமன்.

பின்வேத கால மக்கள் வணங்கிய தெய்வங்கள்:- பிரம்மன், விஷ்ணு, சிவன் (ருத்ரன்).

மகதம்

வட இந்தியாவில் 16 மகா ஜன பதங்கள் மேலோங்கி இருந்தன. அவை ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போரிட்டுக்கொண்டன. இறுதியில், மகதம் பிற மகாஜன பதங்களை வென்று பேரரசாக எழுச்சி பெற்றது.

முதல் பேரரசான மகத (இன்றைய பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி) நாட்டின் தலைநகராக முதலில் சிராவஸ்தியும், பின்னர் ராஜகிருகம் என்னும் நகரமும், இறுதியாக பாடலிபுத்திரமும் இருந்தன.

மகதத்தை ஆண்ட முதல் அரசர் பிம்பிசாரர். இவரது வம்சம் ஆர்யங்க மரபு.

பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு, தனது தந்தையை சிறையில் அடைத்து, ஆட்சியைக் கைப்பற்றினார்.

முதல் புத்தசமய மாநாட்டை ராஜகிருகத்தில் நடத்தினார் அஜாதசத்ரு.

ஆர்யங்க வம்சத்தை வீழ்த்தி, சிசுநாகர் ஆட்சியைப் பிடித்தார்.

சிசுநாகருக்குப்பின் நந்தவம்சத்தினர் ஆட்சியைப் பிடித்தனர்.

நந்த வம்சத்தின் முதல் மன்னர் மகாபத்மநந்தர்.

நந்தர்கள் காலத்தில் மாசிடோனிய மன்னர் அலெக்சாண்டர் இந்தியாவின் மேற்குப்பகுதி வழியாக படையெடுத்து வந்தார்.

அலெக்சாண்டர் தனது வீரர்கள் களைப்புற்றதாலும், நந்தர்களின் வீரத்தை அறிந்ததாலும் போரிடாமல் திரும்பிச் சென்றார்.

நந்தர்களில் கடைசி மன்னன் தனநந்தர்.

தனநந்தருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று, மகதப் பேரரசை சந்திரகுப்தர் கைப்பற்றி மௌரிய வம்சத்தை தோற்றுவித்தார் (கி.மு.324-கி.மு.299).

சந்திர குப்த மௌரியர் செலூயுகஸ் நிகேடாரைத் தோற்கடித்து பல பகுதிகளை தனது பேரரசுடன் இணைத்தார்.

செலூயுகஸ் அனுப்பிய தூதர் மெகஸ்தனிஸ். இவர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி இண்டிகா என்ற நூலை எழுதினார்.

சந்திரகுப்த மௌரியர் பின்னர் அரியணையைத் துறந்து சமண மதத்தைத் தழுவி சரவண பெலகொலா பகுதிக்குச் சென்று சமணமத நம்பிக்கையின்படி தவமிருந்து உயிர்நீத்தார்.

சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அசோகர்

பிந்துசாரருக்குப் பின், அவரது மகன் களில் ஒருவரான அசோகர், மௌரியப் பேரரசர் ஆனார் (கி.மு.273-கி.மு.236).

அசோகர் தனது அரசிலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தை மீட்கச் செய்த கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேர் மாண்டனர். ஒன்றரை லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறினர். இதன் பேரழிவுக் காட்சிகளால் இனிப் போரிடுவதில்லை என உறுதி பூண்டார்.

இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை (Welfare State) உருவாக்கிய சிறப்பு அசோகரையே சேரும்.

அசோகர் போருக்கான திக் விஜயத்தை வெறுத்து தர்மத்திற்கான தர்ம விஜயத்தை மேற்கொண்டார். புத்த மதத்தைத் தழுவினார், புத்த மதத்தை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பரப்பினார்.

அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.

அசோகர் காலத்தில் மாநில அதிகாரிகளாகவும், ஆளுநர்களாகவும் செயல்பட்டவர்கள் மகாமாத்திரர்கள். மக்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் தர்ம மகாமாத்திரர்கள். எல்லைப் பாதுகாப்பை கண்காணித்தவர்கள் அந்த மகாமாத்திரர்கள்.

மூன்றாவது புத்தசமய மாநாட்டை அசோகர் பாடலிபுத்திரத்தில் நடத்தினார்.

மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகத்ரதன். இவர் தனது படைத்தலைவரான புஷ்யமித்ரனால் படுகொலை செய்யப்பட்டார். இதன்பின் மகதம் ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் வலுவிழந்து நின்றது.

மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் வட இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு குஷானப் பேரரசு.

யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினரே குஷானர்கள்.

குஷான அரசை முதலாம் காட்பீஸஸ் கி.பி. முதலாம் நூற்றாண்டில் நிறுவினார்.

குஷான மன்னர்களில் சிறந்தவர் கனிஷ்கர்.

சக ஆண்டு (கி.பி.78) தோன்றியது கனிஷ்கர் காலம்.

இவர் சீனர்களிடமிருந்து காஷ்கர், யார்க்கண்டு, கோட்டான் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினார்.

அசோகருக்குப் பின் கனிஷ்கர், புத்த சமயத்தைத் தீவிரமாகப் பின்பற்றியதால், இவருக்கு ‘இரண்டாம் அசோகர்’ என்று பெயர்.

கனிஷ்கர், நான்காம் புத்தசமய மாநாட்டினை காஷ்மீரில் நடத்தினார்.

கனிஷ்கர் காலத்தில் புத்தசமயம் மகாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. மகாயானத்தில் புத்தர் உருவங்கள் செய்யப்பட்டு, வழிபடப்பட்டார்.

குப்தர் காலம்

குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர். தலைநகரம் பாடலிபுத்திரம்.

அடுத்து ஆட்சிக்கு வந்தவர் முதலாம் சந்திரகுப்தர்.

முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் குப்த சகாப்தம் தோன்றியது.

முதலாம் சந்திரகுப்தர் தனது மனைவி குமாரதேவியின் உருவத்தைக் கொண்டு நாணயம் வெளியிட்டார்.

முதலாம் சந்திரகுப்தருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் சமுத்திரகுப்தர். சமுத்திரகுப்தர் பல வெற்றிகளைப் பெற்றதால், இந்திய நெப்போலியன் என்றழைக்கப்படுகிறார்.

இவருடன் தொடர்புடையது அலகாபாத் கல் தூண்.

இவரது அமைச்சர் அரிசேனர், சமுத்திரகுப்தரின் பெருமைகளை இக்கல் தூணில் இடம்பெறச் செய்தார்.

சமுத்திரகுப்தர் வீணை வாசிப்பதில் வல்லவர். எனவே, நாணயங்களில் வீணை வாசிப்பது போன்ற படங்களை இடம்பெறச் செய்தார்.

இதனையடுத்து ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் சந்திரகுப்தர்.

வரலாற்றில் இரண்டாம் சந்திரகுப்தர், விக்கிரமாதித்தன் என்றழைக்கப்படுகிறார்.

இவர் சாகர்களை வென்றதால் ‘சாகாரி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் உஜ்ஜயினியை இரண்டாவது தலைநகராக ஆக்கினார்.

பாஹியான் இவரது ஆட்சிக்காலத்தில் வருகை தந்தார்.

நவரத்தினங்கள்’ என்று போற்றப்பட்டவர்கள் இவரது அமைச்சரவையில் இருந்தனர்.

நவரத்தினங்களில் ஒருவரே காளிதாசர்.

ஆர்யபட்டர், வராகமிகிரர், வராகபட்டர், அமரசிம்மர், தன்வந்திரி போன்ற நிபுணத்துவம் மிக்க அறிஞர்கள் குப்தர் காலத்தில் வாழ்ந்தனர்.

குமார குப்தர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

குப்தர்களின் கடைசி மன்னர் ஸ்கந்த குப்தர். ஹீணர்களின் படையெடுப்பினால் குப்த வம்சம் அழிவுற்றது.

குப்தர்கள் காலம், பொருளாதாரம் உட்பட பல துறைகளிலும் முன்னேற்ற நிலையில் இருந்ததால், இவர்களது காலம் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது.

error: Content is protected !!