சொத்து விற்பனை பத்திரப்பதிவு போல, திருமணம், சங்கம், சீட்டு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களின் பதிவு பணிகளையும், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் புதிய திட்டம், நாளை துவக்கப்படுகிறது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், பிப்., 12ல் ஆன்லைன் முறைக்கு மாற்றப் பட்டன. இதற்காக, ‘ஸ்டார் – 2.0’ என்ற, புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், திருமணம், சங்கம், சீட்டு, கூட்டு நிறுவனங்கள் போன்ற பதிவுகள், பழைய முறைப் படியே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக, ஸ்டார் திட்டத்தின் பழைய சாப்ட்வேரும் பயன்பாட்டில் இருந்து வந்தது.இந்நிலையில், அனைத்து வகையான பதிவு பணிகளையும், ஆன்லைன் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களாக, இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகள் வெற்றி பெற்றதையடுத்து, இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை முடிவு செய்துஉள்ளது.தலைமைச் செயலகத்தில், நாளை நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதனால், பழைய ஸ்டார் திட்ட சாப்ட்வேர் பயன்பாடு முடிவுக்கு வருகிறது என, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். – நமது நிருபர் –