இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலம், இணையதள வேகம் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட GSAT 6A செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.
இதனை அடுத்து, ஜூன் மாதமே விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர்.
இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் இந்திய நேரப்படி அதிகாலை 2.07 மணியில் இருந்து 3.23 மணிக்குள் ஐரோப்பாவின் ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோளை விண்ணில் செலுத்த பிரெஞ்சு கயானா ஏவுதளம் நேரம் தந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.