உலகம் முழுவதும் நவம்பர் 12-ஆம் தேதி நிமோனியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாகும். நிமோனியா காய்ச்சலால், கடந்த 2012-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் இறந்துள்ளனர்.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறலாம். நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய நுண்ணுயிர்கள் வகைகளைச் சேர்ந்த காளான்களாகவும் இருக்கலாம். காளான் வகையில் நியூமோசிஸ்ட்டிஸ் காரின்னி (Pneumocystis Carinii) இதற்கு முக்கிய காரணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை பொதுவாக இந்த நோய் அதிகளவில் தாக்குகிறது. இதன் கிருமிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இரண்டு நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை பாதித்து அவைகளை செயல் இழக்க செய்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் சுவாசிக்க முடியால் இறக்கிறது. கடந்த 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு நிமோனியா காய்ச்சலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சுகாதாரத்துறை குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் ஓரளவிற்கு குறைத்து வருகிறது.
இந்நிலையில், நிமோனியா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டே ஆண்டுதோறும் இந்த நாள்(நவம்பர் 12) நிமோனியா விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சாதாரணமாக காய்ச்சல் குழந்தைக்கு வந்தால் கூட, அலட்சிய படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தைகளை நிமோனியா போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.