ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும். அது எது என்பதை உணர்ந்து வெளியே கொண்டுவந்து செயலாக்கும்போதுதான் சாதனை என்ற மகுடம் சூட்டப்படும். அப்படித்தான் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இயங்கும் செயின்ட் ஜான் பீட்டர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் எஸ்.முகமது ரபீஃக் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என இதுவரை ஒன்பது கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு ஏழு தங்கப்பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் பங்கேற்ற ஒன்பது போட்டிகளில் ஏழு முறை முதல் பரிசை தன்வசப்படுத்தியுள்ளதோடு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மலேசிய மற்றும் ஆப்பிரிக்க வீரர்களை வென்று தங்கப்பதக்கத்துடன் இந்தியா திரும்பியுள்ளார். வெற்றிவாகை சூடிய ரபீஃக் உற்சாகத்தோடும், மனம்நிறைந்த மகிழ்ச்சியோடும் தன் கராத்தே பயணம் பற்றி கூறியவற்றைப் பார்ப்போம்…
‘‘ஐந்தாம் வகுப்பில்தான் செயின்ட் ஜான் பீட்டர் ஸ்கூல்ல சேர்ந்தேன். அங்க படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. கார்த்திக் மாஸ்டர்தான் கராத்தே சொல்லிக்கொடுத்தாங்க. என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கராத்தே வகுப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டும் போட்டிகள்ல கலந்து ஜெயிச்சுக்கிட்டும் இருக்கும்போது நான் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன்.
நாளாக நாளாக என் நண்பர்களைப் பார்த்து எனக்கும் கராத்தே பழகவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்படி ஆர்வத்தால் விளையாட்டாக ஐந்தாம் வகுப்பில் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன். நாளடைவில் கராத்தே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அதிக ஆர்வம் கொண்டு தொடர்ந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து எங்கள் கார்த்திக் மாஸ்டர், கராத்தேவோட அடிப்படைகளையும், போட்டிகளில் பாயின்ட் எடுக்கும் நுணுக்கங்களையும், ஃப்ரெண்ட்லியாக கற்றுக் கொடுத்து என்னை தயார்படுத்தினார்’’ எனும் ரபீஃக் தன் முதல் போட்டி அனுபவத்தை விளக்கத் தொடங்கினார்.
‘‘திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற மாநில அளவிலான அண்டர்-19 போட்டியில் முதல் முறையாக ஆறாம் வகுப்பில் பங்கேற்றேன். போட்டி கடுமையாக இருந்தது. முதன் முதலில் பங்கேற்கும் போட்டி என்பதாலும், எப்படியாவது முதல் பரிசை வெல்லவேண்டும் என்பதாலும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அதுபோன்ற
சமயங்களில் கார்த்திக் மாஸ்டர் என்னை ஊக்கப்படுத்தினார்.
கராத்தே போட்டியில் Punchக்கு ஒரு பாயின்ட், Kick அடித்தால் மூன்று மற்றும் Topping-குக்கு மூன்று பாயின்ட். வெற்றி பெற ஆறு பாயின்ட்கள் எடுத்தால் போதும். தலையில் இரண்டு தடவை கிக் அடித்து ஆறு பாயின்ட்கள் பெற்று அடுத்த ரவுண்ட் சென்றேன். இப்படி அனைத்து ரவுண்டிலும் கிக் அடித்து முன்னேறி கடைசி ரவுண்டில் டாப்பிங் அடித்து மாநில அளவில் இரண்டாம் பரிசை வென்றேன்.
அடுத்ததாக திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கோல்டுமெடலும், ஏழாம் வகுப்பு படிக்கும்போது கோயமுத்தூரில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் கலந்துகொண்டேன். தொடர்ந்து முன்னேறி ஈரான் வீரருடன் ஃபைனல் ரவுண்டில் மோதி முதல் பரிசான கோல்டு மெடலை வென்றேன்.
2018ம் ஆண்டு மதுரை அன்னை தெரசா கல்லூரியில், மலேசிய சர்வதேசப் போட்டிகளுக்கான செலக்ஷன் நடந்தது. செலக்ஷனில் வென்று மலேசிய போட்டிகளுக்கு தேர்வானேன். மலேசியா, சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், எத்தியோப்பியா நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் மொத்தம் ஐந்து ரவுண்டுகள். ஒரு ரவுண்ட்டிற்கு ஆறு பாயின்ட்கள் வீதம் ஐந்து ரவுண்ட்டிற்கு மொத்தம் முப்பது பாயின்ட்களுக்கான போட்டி நடந்தது.
மொத்தம் 30 பாயின்ட்களுக்கு 19 பாயின்ட்கள் என்ற வீதத்தில் முதல் பரிசான கோல்டு மெடலை வென்றேன்’’ எனும் ரபீஃக், ‘‘என்னைத் தயார்படுத்திய கார்த்திக் மாஸ்டரும், அனைத்து நேரத்திலும் உறுதுணையாக நின்ற பெற்றோரும்தான் நான் வெல்ல முக்கியக் காரணம்.
இவர்களின் ஒத்துழைப்போடு கராத்தேவில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே என் ஆசை’’ என்கிறார் முகமது ரஃபீக். இதுபோன்ற விளையாட்டில் ஆர்வமிக்க இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தால் சர்வதேச அரங்கில் விளையாட்டுத் துறையில் இந்தியாவும் தனி முத்திரைப் பதிக்கலாம்.