2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆசியப் போட்டிகள்,காமன்வெல்த், உலகக் கோப்பை கிரிக்கெட், ஹாக்கி, குத்துச்சண்டை, பிஃபா 17 வயதுக்குட்பட்டோர் உலக கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி இதுவரை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நிகழாண்டு தொடக்கத்தில் இந்தியா வந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) தலைவர் தாமஸ் பேட்சிடம் 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தார் ஐஓஏ தலைவர் நரீந்தர் பத்ரா. மேலும் இதுதொடர்பாக விருப்ப வரைவையும் ஐஓசியிடம் அளித்துள்ளது.
இதற்கிடையே ஐஓஏ பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஐஓசி ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் ஜாக்குலின் பாரேட் தலைமையிலான குழுவை சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ராஜிவ் மேத்தா திங்கள்கிழமை கூறியதாவது:
2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம். இதற்காக ஏற்கெனவே விருப்ப கடிதத்தையும் அளித்து விட்டோம். விண்ணப்ப கமிட்டியிடமும் நான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். அவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். முன்னதாகவே ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தி இருக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
புது தில்லி, மும்பை ஆகிய 2 நகரங்கள் ஐஓஏ நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளோம்.
முதல் கட்டமாக போட்டியை நடத்த விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக நகரின் பெயரை குறிப்பிட வேண்டும். 2032 போட்டிக்கான நடைமுறை 2022-ஆம் ஆண்டு தொடங்கும். இந்தோனேஷியா, ஆஸி.யில் பிரிஸ்பேன், சீனாவில் ஷாங்காய், ஜெர்மனி, வடகொரியா-தென்கொரியா இணைந்து நடத்தவும் விண்ணப்பிக்க உள்ளன.
மேலும் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முறையாக அரசின் அனுமதி கோரப்படும். மத்திய அரசு ஐஓஏ முயற்சிக்கு கடிதம் தர வேண்டும். சீனா, கொரியா போன்றவற்றால் ஒலிம்பிக் போட்டி நடத்த முடியும் என்ற நிலையில் நம்மால் ஏன் முடியாது என்றார் மேத்தா.
எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. (News from Kalvisiragukalplus.com)
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, பொதுச் செயலர் ராஜிவ் மேத்தா.