பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கலாசாரத்தின் வீடுகள் என்றார் பல்கலைக்கழக மானியக் குழு கூடுதல் செயலர் பங்கஜ் மித்தல்.
கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ஆவது பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் பேசியது:
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2017, ஜூன் 23ஆம் தேதி தொடங்கப்பட்ட மாணவர் சேட்டிலைட் திட்டத்தின் கீழ் இந்த உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் இஸ்ரோ உதவியுடன் என்ஐயுசேட் என்ற செயற்கைக்கோளை உருவாக்கினார்கள். அது பாராட்டுக்குரியது.
பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கல்வி கற்றுத்தரும் இடம் மட்டுமல்ல; அவை கலாசாரத்தின் வீடுகள், சிறந்த மனிதர்களைப் பயிற்றுவிப்பதற்கான கோயில்கள். அவை மாணவர்களுக்கு அறிவை வழங்குவதோடு குணம், நாகரிகம், புரிந்துகொள்ளுதல் போன்றவற்றையும் வளர்க்கின்றன. குடிமக்களுடன் சமச்சீரான சமுதாயத்தை உருவாக்கவும், புத்திசாலித்தனமாகவும், சிக்கலான பிரச்னைகள் குறித்த உணர்திறனுடனும் அவர்களின் நிகழ்ச்சிநிரல் இருக்கும்.
பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், அவை தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிடும். பட்டம் என்பது ஒருகட்டத்தின் முடிவையும், மற்றொரு தொடக்கத்தையும் குறிக்கிறது. இங்கு கற்றுக்கொண்ட அறிவாற்றல் பழக்கம், தார்மிகத் தன்மை, ஒழுக்கமான வாழ்க்கைமுறை போன்றவை தொழில் வாழ்க்கையை வளர்ப்பதில் மாணவர்களுக்கு திறம்பட பங்களித்து உதவும்.
மாணவர்கள் இப்போதே தங்களின் வேலை குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். அவ்வாறான திட்டமிடலில் உயர் படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, நம் நாட்டின் மீது மதிப்பும், காதலும் இதயத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். பெருமாள்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். 362 இளநிலை பட்டதாரிகள், 172 முதுநிலை பட்டதாரிகள், 60 எம்.பில். மாணவர்கள், 54 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வேந்தர் ஏ.பி. மஜீத்கான் பட்டங்களை வழங்கினார்.
மேலும், பல்வேறு துறைகளில் தரவரிசையில் முதலிடம் பெற்ற 26 பட்டதாரிகளுக்கு தங்கப் பதக்கம், முதல் 100 மாணவர்களுக்கு தரவரிசை சான்றிதழ்களையும் வேந்தர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணைவேந்தர் எம்.எஸ். பைசல்கான், ஆட்சிக் குழு உறுப்பினர் எம்.எஸ். அன்சா சப்னம், இணை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் திருமால்வளவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணன், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார், முதன்மையர் கே.ஏ. ஜனார்த்தனன் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.