கேரளா திருவில்லா பகுதியில் பிறந்த 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ். இவர் சிறுவயதிலிருந்தே மொபைல் போன் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். ஆதித்யன் ராஜேஷுக்கு 5 வயது இருக்கும்போது அவரது தந்தைக்கு துபாயில் வேலை கிடைத்தது.
இதனால் அவர்கள் குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்தனர். இதையடுத்து கடந்த 4 வருடத்திற்கு முன்பு தனது 9 ஆம் வயதில் ஆதித்யன் ராஜேஷ் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்ட ஆதித்யன், லோகோ மற்றும் இணையதளப்பக்கங்களை உருவாக்கி சம்பாதிக்க தொடங்கினார்.வாடிக்கையாளர்களும் குவியத்தொடங்கினர். இதையடுத்து டிரினெட் சொலுயுஷன் என்ற பெயரில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை தற்போது தொடங்கியுள்ளார். தனது 13 ஆம் வயதில் சாதனை படைத்துள்ள இந்தச் சிறுவனின் நிறுவனத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் என 3 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆதித்யன் ராஜேஷ் கூறுகையில், நாங்கள் 12 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்து வருவதாகவும் எங்கள் வடிவமைப்பு மற்றும் குறியீடுகளை இலவசமாக வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் 18 வயதிற்கு மேல் நான் ஒரு நிறுவனத்தின் தலைவராக வேண்டும் எனத் தெரிவித்தார்.