குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை அதிகபட்சமாக தக்கலையில் 34.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல் கன்னிமார்– 3.2, கொட்டாரம்– 5.2, மயிலாடி– 6.4, புத்தன் அணை– 1.4, குளச்சல்– 6.4, இரணியல்– 24, குருந்தன்கோடு– 9.4, ஆனைகிடங்கு– 3 மில்லி மீட்டர் என்ற அளவிலும், அணை பகுதிகளில் பெருஞ்சாணி– 1, மாம்பழத்துறையாறு அணை 5 மில்லி மீட்டர் என்ற அளவிலும் மழை பெய்திருந்தது.
மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதாவது நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு பேச்சிப்பாறை அணைக்கு 481 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போன்று பெருஞ்சாணி அணைக்கு 248 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு 169 கனஅடி தண்ணீரும் வருகிறது. அதே சமயத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 656 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 120 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.
மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கால்வாய்களிலும் தண்ணீர் செல்கின்றன. இந்த நிலையில் தொடர் மழையால் குமரி மாவட்டத்தில் 70 சதவீத பாசன குளங்கள் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் மொத்தம் 2040 குளங்கள் உள்ளன. இவற்றில் 70 சதவீதம் குளங்கள் தற்போது நிரம்பி உள்ளன. மீதி உள்ள குளங்கள் நிரம்பும் தருவாயில் இருக்கின்றன. அவற்றுக்கும் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது“ என்றார்.