கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
மாணவர்கள் தேர்வுகளை பயமின்றியும், மனஅழுத்தம் இல்லாமலும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியுள்ளார். “பரீட்சைக்கு பயமேன்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தை, நாகர்கோவில் கோணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி, எஸ்எல்பி., அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு இலவசமாக செவ்வாய்க்கிழமை வழங்கி பொன். ராதாகிருஷ்ணன் பேசியது:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடி வருகிறார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார். மேலும், தேர்வெழுதும் மாணவர்களை மன அமைதியுடன் தேர்வுக்கு தயார் செய்யும் “பரீட்சைக்கு பயமேன்’ என்ற புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்டுள்ளார். இது, மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். இந்த புத்தகம் 40 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, 10 ஆயிரம் பிரதிகள் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மாணவர்களாகிய உங்களுக்கு மற்றவர்கள் போட்டி கிடையாது; உங்களுக்கு நீங்கள்தான் போட்டி. நீங்கள் திறமையை வளர்த்துக்கொண்டால் எவரையும் வெல்ல முடியும். மாணவர்கள் 2 குறிக்கோள்களை வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று மிகப்பெரிய வெற்றி பெறுவது. இன்னொன்று சமாதானமாகி தோற்று போவது. இதில் நிங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யுங்கள். மாணவர்களிடம் போட்டி, பொறமை இருக்கக்கூடாது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் 8 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அப்போது நாகர்கோவில் பள்ளியிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதே போல் சிபிஎஸ்இ தேர்வு மையம் நாகர்கோவிலில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை விரைவில் திறக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளி செந்தில்குமார், எஸ்.எல்.பி. பள்ளி விஜயன், மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் முத்துராமன், நகரத் தலைவர் நாகராஜன், முன்னாள் நகர்மன்றத் தலைவி மீனாதேவ், பொருளாளர் தர்மலிங்க உடையார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.