திண்டிவனம் அருகே உள்ள வடநெற்குணத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில், கல்வித்துறை உத்தரவின் பேரில், மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் அகஸ்டின் தலைமையிலான அரசுப் பள்ளி நிர்வாகத்தினர் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, பிளஸ் 1 படித்து வரும் அந்த மாணவரின் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் இணைக்காமல் இருந்ததும், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவர் தோல்வி அடைந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த மாணவரை அழைத்து அசல் மதிப்பெண் சான்றிதழை கொண்டு வந்து தருமாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறியதால் நேற்று பெற்றோருடன் வந்து மதிப்பெண் சான்றிதழை அந்த மாணவர் கொடுத்துள்ளார்.
அதை ஆசிரியர்கள் ஆய்வு செய்தபோது, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 23 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்ததும், மீண்டும் உடனடி தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரிந்தது. ஆனால், பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் தமிழ் பாடத்தில் 35 மதிப்பெண் எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதை பள்ளி நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததால் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து இதுவரை படித்து வந்திருக்கிறார்.
தற்போது, இந்த உண்மை தெரியவந்ததும் அந்த மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியில் இருந்து வெளியேற்றினர். ஆனால், விரைவில் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிளஸ் 1 படித்து வந்த மாணவரை திடீரென பள்ளியில் இருந்து வெளியேற்றியதற்கு மாணவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.