மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் பல் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக பல் மருத்துவர்கள் சங்க மாநாடு கன்னியாகுமரி ஓய்.எம்.சி.ஏ. வில் 2 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை தொடங்கிய இம்மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஆர். அருண்குமார் தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி உள்பட
பல்வேறு இடங்களில் பல்நோக்கு மருத்துவமனையும் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் சென்னை சிறந்து விளங்குகிறது. வெளிநாட்டினர் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக பல் மருத்துவர்கள் மத்திய அரசை அணுகும் பட்சத்தில் தமிழகத்தில் பல் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கனிவுடன் நிறைவேற்றும் என்றார் அவர்.
அமைப்பின் மாநில செயலர் கே.பி. செந்தாமரைக் கண்ணன், அண்ணாமலை மருத்துவக் கல்லூரி டீன் ராஜ சிகாமணி, விநாயகா மிஷன் பல் மருத்துவமனை டீன் பேபிஜான், டாக்டர் கிங்ஸ்லி செல்வகுமார் உள்பட பலர் பேசினர்.