மாணவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு தவறான சிந்தனைகள் வராது என்றார் குமரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம்.
நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, குமரி மாவட்ட அத்லெடிக் கவுன்சில் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்.ஜெஸ்லி கல்லூரி தாளாளர் பொன்ராபர்ட்சிங் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், போட்டிகளை தொடக்கி வைத்து நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் பேசியது:
மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் மற்றும் சிந்தனை திறன் நன்கு வளரும். தற்போது கைப்பேசி மற்றும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால், மாணவர்களின் சிந்தனை வேறு திசை நோக்கிப் பயணிக்கிறது. அவற்றை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கைப்பேசியில் அதிக நேரத்தை வீணடிக்கக் கூடாது. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள், தவறான சிந்தனைக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள மாட்டார்கள். எனவே, மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது அவர்களது எதிர்காலத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரன், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் எட்வர்ட், கல்லூரி உடல்கல்வி இயக்குநர் ஆர்தர்டேனியல், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, குமரி மாவட்ட அத்லெடிக் கவுன்சில் தலைவர் ஆறுமுகம்பிள்ளை உள்ளிட்டோர் பஙகேற்றனர்.