சென்னை, பள்ளி கல்வித் துறையில், பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில், இந்த ஆண்டு ஜூனில், நிர்வாக சீர்திருத்தம்அமலுக்கு வந்தது.பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்த பல அதிகாரங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டன.இதன்படி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவரவர் மாவட்டத்தில், நிர்வாக ரீதியான இடமாறுதல் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டது.ஆனால், சில மாவட்டங்களில், சி.இ.ஓ.,க்கள், தேவையற்ற மாறுதல் செய்தும், காலி இடங்களை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தாமலும்,குளறுபடி செய்துள்ளனர்.அதனால், சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி ஊழியர்களை நிர்வாக மாறுதல் செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர், நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்ட அளவிலான இடமாறுதல்களால், பள்ளி கல்வி இயக்கத்தின் நிர்வாக பணிகளில், காலியிட பட்டியலை சரியாக பராமரிக்க முடியவில்லை.எனவே, பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் ஊழியர்களை, சி.இ.ஓ,க்கள் இடமாறுதல் செய்ய வேண்டாம்.நிர்வாக அவசரமாக இருந்தால், பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் இணை இயக்குனரகத்தின் ஒப்புதல் பெற்று மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.