சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (அதாவது இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்துள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை துவங்கியது. இன்று காலை 9.58 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த அதி நவீன பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட் மூலம், 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அவற்றுடன் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளும் பயணிக்கிறது.
ஹைசிஸ் செயற்கைக்கோள், முழுக்க, முழுக்க புவி வெளிப்பரப்பை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. சுமார் 380 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.
புவி வட்டப் பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவில் அதனை நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிற 30 செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவி, இஸ்ரோ உலக சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.