தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி.,கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு,தமிழக அரசு சார்பில் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 2.22 லட்சம் பேர், ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.
ஆனால், 1.85 லட்சம் பேர் மட்டுமே, விண்ணப்ப கட்டணம் செலுத்திஉள்ளனர். அவர்களில், 1.34 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை நகல் எடுத்து, அண்ணா பல்கலை வழங்கிய கால அவகாசமான, ஜூன், 4ம் தேதிக்குள் அனுப்பினர். தற்போது விண்ணப்ப பரிசீலனை நடந்து
வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதியை,அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன், நேற்று அறிவித்தார்.
கணேசன் தெரிவித்த விவரம்
விண்ணப்பங்களுக்கான, ரேண்டம் எண், ஜூன், 20ல் வெளியிடப்படும். மாணவர்களின், கட் ஆப் மதிப்பெண்ணின் படி, தரவரிசை பட்டியல், ஜூன், 22ல் வெளியாகும். ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், ஜூன், 25ல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கும். பொது கவுன்சிலிங் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது, தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் அழைப்பு கடிதம்
இந்த ஆண்டு கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்படாது. கவுன்சிலிங்குக்கு தகுதியான அனைவருக்கும், இணையதளத்தில் ஆன்லைன் அழைப்பு கடிதம் பதிவேற்றப்படும். மாணவர்கள், தங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் கவுன்சிலிங் விண்ணப்ப எண் ஆகியவற்றை பயன்படுத்தி, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
இலவச தங்குமிடம்
இந்த ஆண்டு முதல், கவுன்சிலிங்குக்கு வரும் மாணவியர், பெண் உறவினர் துணையுடன் வந்தால், அவர்கள் அண்ணா பல்கலை வளாக கட்டடத்தில் தங்க, இலவச இட வசதி அளிக்கப்படும்.