குமரி மாவட்டத்தில் 4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் பிஎஸ்என்எல் மாவட்ட பொது மேலாளர் சஜிகுமார்.
அருமனையில், பிஎஸ்என்எல் அதிவேக கண்ணாடி இழை இணைய சேவை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியது: குமரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளையும், அதிவேக கண்ணாடி இழை கேபிள் வாயிலாக இணைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கிராமப் பகுதிகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் அகற்றப்படும். அனைத்து கிராமங்களிலும் கேபிள் டிவி இணைப்புகளுடன், அதி வேக இன்டர்நெட் இணைப்புகளும் வழங்கப்படுகின்றன.
இதற்காக மாவட்டத்திலுள்ள 22 கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அருமனை, குலசேகரம், நெய்யூர் உள்பட 7 இடங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இதற்காக மாவட்டத்திலுள்ள 166 செல்லிடப்பேசி கோபுரங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், உதவிப் பொதுமேலாளர் நீலகண்டன், குழித்துறை கோட்டப் பொறியாளர் சுரேஷ் ஜோதி, அலுவலர்கள் செல்வராஜ், கிருஷ்ணன், அருமனை நிர்மல் நெட்வொர்க் இயக்குநர் நிர்மல் ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர். அருமனை தொலை பேசிநிலைய இளநிலை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.