மாணவர் முகமது ஹாசன் அலிக்கு சிறப்பு அனுமதி பத்திரம் வழங்குகிறார் பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர்.

சென்னை வண்டலூர் பி.எஸ்.ஏ. கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களுக்கு 7-ஆம் வகுப்பு மாணவர், பொறியியல் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
ஹைதராபாதை சேர்ந்தவர் முகமது ஹாசன் அலி (11). தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், மாலை 6 மணிக்கு மேல் தனது வீட்டில் கட்டடவியல், இயந்திரவியல், கணினி பொறியியல் பி.டெக், எம்.டெக்., படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்.
முகமது ஹாசன் அலியின் அபார அறிவாற்றலைக் கேள்விப்பட்ட பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர், மாணவர் முகமது ஹாசன்அலியை சென்னைக்கு வரவழைத்து பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி முகமது ஹாசன் அலி சுமார் ஒரு மணி நேரம் பொறியியல் பாடம் நடத்தி அனைவரையும் வியக்கவைத்தார்.
அவரது அறிவாற்றலையும்,பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு நிகராகப் பாடம் நடத்தி மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பி, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்ததைக் கண்டு வியந்த துணைவேந்தர் சாகுல் ஹமீது, மாணவர் முகமது ஹாசன் அலியைக் கெளரவிக்கும் வகையில் கிரசென்ட் சர்வதேச உறைவிடப் பள்ளியில் பள்ளி இறுதிப் படிப்பையும், பின்னர் கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் வரை உயர்கல்வியும், வெளி நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான முழுச் செலவையும் கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஏற்றுக் கொள்வதற்கான சிறப்பு அனுமதி பத்திரத்தை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட முகமது ஹாசன் அலி வரும் 2020 ஆண்டுக்குள் ஒகு லட்சம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பதிவாளர் ஏ.ஆஸாத், உதவி பதிவாளர் ராஜா ஹூசேன், மேலாளர் மஜூத், மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் நிக்கத் அம்சா, மக்கள் தொடர்பு அலுவலர் அபுபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (News from www.dinamani.com)

 

error: Content is protected !!