”எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், 5,791 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார். அவர் பேசியதாவது:தமிழகத்தில், வரும், 21ல், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் உருவாக்கப்படும். கோபி பவளமலை அருகே, 6 ஏக்கரில், விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ – மாணவியருக்கு, மடிக்கணினி வழங்குவது குறித்து மத்திய அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையில், தமிழகத்தில் மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில், புத்தகத்தை ஏந்தி செல்லும் மாணவர்கள், எதிர்காலத்தில், மடிக்கணினியை ஏந்தி செல்லும் வரலாற்றை உருவாக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறைக்காக, மிக விரைவில், ‘ஸ்டுடியோ’ ஒன்றும், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, தனியாக சேனல் ஒன்றும் உருவாக்கப்படும். கோபி அருகே, கொளப்பலுாரில், ‘டெக்ஸ்டைல் பார்க்’ இரண்டு மாதங்களில் உருவாக்கப்படும். இதன் மூலம், மூன்றாண்டுகளில், 7,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு பள்ளிகளில், ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பை துவங்க, நீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது. இதற்காக வரும், 21ல், சமூக நலத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.