குமரி மாவட்டத்தில் 5½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை– எளிய, சாமானிய மக்கள் அனைவரும் சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை சென்னை, தலைமையிடத்தில் தொடங்கி வைத்து, அனைத்து மாவட்டத்திலும் வழங்கிட ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் ஏழை– எளிய மக்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை வடிவீஸ்வரம், நியாயவிலைக் கடை அருகில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் பேசும்போது கூறியதாவது:–
5½ லட்சம் கார்டுதாரர்கள்
தமிழக முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க விலையில்லா அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் 5 லட்சத்து 44 ஆயிரத்து 986 குடும்ப அட்டைதாரர்கள், போலீஸ் ரேஷன்கார்டுதாரர்கள் 2,073 பேர் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள 419 இலங்கை தமிழர் குடும்பத்தினர் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (நேற்று) முதல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.