அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’ சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
மொபைல் தொலைபேசி பயன்பாடு 100 கோடியை எட்டியுள்ளது. இணையதள பயன்பாடு 40கோடியை கடந்துவிட்டது. அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 20 முதல் 30 கோடியாக அதிகரிக்கும். எனினும் அடுத்த 6 மாதங்களுக்குள் 50 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதற்காக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்களை அமக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதுவரை 200 இடங்களில் 500 ‘வை-பை’ இணைப்பு மையங்களை பி.எஸ்.என்.எல் தொடங்கியுள்ளது. ‘வை-பை’ இணைப்பு திட்டம் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவு திட்டமும் நிறைவேறும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பேசினார்.