நாட்டில் நிறைவேற்றப்படும் முக்கிய திட்டங்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து யோசனைகளை ‘ஆன்லைனில்’ பதிவு செய்கிறது பிரதமர் அலுவலகம்.
பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் ‘mygov.in’. இதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி பொதுமக்களின் யோசனைகள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.இந்திய மொழிகள் பற்றிய விபரங்களை ஆடியோ, வீடியோ, கருத்துகள், விளக்கங்களை தரும் ‘பாரதவாணி’ என்ற திட்டத்தை மோடி அரசு தயாரித்துள்ளது. இத்திட்டத்திற்கான ‘சின்னத்தை’ உருவாக்கி அனுப்புங்கள் என பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பலர், இதில் தங்கள் பங்களிப்பை அனுப்பி வருகின்றனர்.
இணையத்தை பயன்படுத்துவோர் தரவிறக்கம் டேட்டாவுக்கு ஆகும் கட்டணத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் ‘டிராய்’ ஈடுபட்டுள்ளது. இதற்கும் பொதுமக்களின் யோசனைகள் வரவேற்கப்பட்டுள்ளன.தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ‘ஆன்லைனில்’ எழுதினால் அதை புரிந்துகொள்ளும் சாப்ட்வேர் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கும் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
அதே போல, இந்திய பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதில் மீடியாக்களின் பங்கு, நாடு முழுவதும் அமைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவற்றிற்கும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ‘கருத்துக் கணிப்பு’ (poll) என்ற ஒரு பிரிவு இருக்கிறது. இதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களுக்கு இதில் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் கிடைக்கும் மக்களின் ஆதரவைப் பொறுத்து, திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.பிரதமர் அலுவலகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. பலர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இம்முயற்சியால், பொதுமக்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே இருந்த இடைவௌி நீக்கப்பட்டுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.