நாடு முழுவதும் உள்ள பரபரப்பான 100 முக்கிய ரெயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-ஃபை இண்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி கலிபோர்னியாவுக்கு சென்றிருந்த போது கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த திட்டத்தை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வை-ஃபை இண்டர்நெட் சேவை இலவசமாக இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ரெயில் நிலையங்களி்ல் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இலவசமாக இண்டர்நெட் வசதியை பெறலாம். ஆப்டிக்கல் பைபர் தொழில்நுட்பத்தில் இந்த சேவை வழங்கப்படுவதால் இண்டர்நெட்டின் வேகம் அதிகமாக இருக்கும்.
விரைவில் இந்தியா முழுவதும் உள்ள 400 முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த வசதியை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கொண்டு வர இந்திய ரெயில்வேயின் ஒரு அங்கமான ரெயில்டெல் அரசு நிறுவனம் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 ரெயில் நிலையங்களில் இந்த இலவச அதிவேக வை-ஃபை இண்டர்நெட் சேவை கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.