இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் பூமியை கண்காணிப்பதற்காக 380 கிலோ எடை கொண்ட ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இதனுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த செயற்கைகோள்கள் உட்பட 31 செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 28 மணி நேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக் கொண்டு செயற்கைகோள்களை சுமந்தபடி நேற்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டின் எடை சுமார் 230.4 டன் ஆகும். புறப்பட்ட 17 நிமிடம் 27 வினாடியில் ராக்கெட் பூமியில் இருந்து திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும் ராக்கெட்டின் என்ஜின் நிறுத்தப்பட்டது. பின்னர் பூமி கண்காணிப்புக்கான ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் சூரிய வழி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டின் என்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களையும் ஒவ்வொரு நிமிட இடைவெளியில் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் திட்டமிட்டபடி அந்தந்த இலக்கில் கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோள்களை விண்வெளியில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. இதில் 2 முறை ராக்கெட் என்ஜின் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி பார்த்து சோதிக்கப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக இருந்து உள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- புவி வட்டப்பாதையில் விண்வெளி கழிவுகள் குறுக்கிட்டதால் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்ட 9.57 மணிக்கு பதிலாக 9 மணி 57 நிமிடம் 30 வினாடிகளில் சற்று காலதாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 45-வது ராக்கெட்டாகும்.

இதேபோன்று இந்த ராக்கெட்டுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 68-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் 636.6 கிலோ மீட்டர் உயரத்தில் 97.957 டிகிரி புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். விவசாயம், வனவளம், புவிசூழல், கடற்கரையோர பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் போன்றவற்றின் தன்மைகள் குறித்த தகவல்களை இந்த செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பும். இதில் உள்ள அதிநவீன படம் பிடிக்கும் கருவி பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும் சிறப்புத்தன்மை கொண்டது.

தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்கள் 504.5 கிலோ மீட்டர் உயரத்தில் 97.468 டிகிரியில் திட்டமிட்டப்படி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு 1 மணிநேரம் 52 நிமிடங்களில் அனைத்து செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது பெருமிதமாக உள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

error: Content is protected !!