தென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கான ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 65 மேல் தாண்டியுள்ளது.
இயற்கை எழில்கொஞ்சும் இந்தப் புலிகள் காப்பக பகுதிகளை கண்டு களிக்க வனச்சுற்றுலாத் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு படையெடுத்தனர். இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலாவுக்கு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு பண்ணாரியில் 5 ஏக்கரில் ரூ.3 கோடி செலவில் டிக்கெட் கவுன்டர், பயணிகள் ஓய்வறை மற்றும் குழந்தைகள் விளையாட புல் தரை ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் வனத்தில் புலி உலாவுவது போன்ற சிலைகள், யானைகள், சறுக்கு விளையாட்டு, மான், இயற்கை குடில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விலங்குகள் தாக்காதபடி பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல ஆசனூரில் புலி உருவம்போன்று சுற்றுலா பயணிகள் டிக்கெட் கவுன்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி, கேர்மாளம், தலமலை ஆகிய வனச்சரங்களிலும் வனச்சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணி தீவரமாக நடந்து வருகிறது. இந்த வனப்பூங்காவில் கிடைக்கும் வருவாய் வனக்குழுவிற்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.