மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்பட தொடங்கும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்பது குழப்பமாக இருந்து வந்தது. இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என ஜூன் 20-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்துடன் சேர்ந்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் இங்கு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடந்ததாக தெரியவில்லை.
அரசிதழில் அறிவிப்பு
எனவே மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய மத்திய சுகாதார துறைக்கு உத்தரவிட்டது.
எப்போது செயல்படும்?
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு பதில் மனுதாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த மருத்துவமனைக்கான திட்ட அறிக்கை மத்திய நிதிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த குழு ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய மந்திரி சபைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். அதன்பின்னர் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி, 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.