மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என்றார் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் பொருள்கள் தயாரிப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்ட விழிப்புணர்வு கண்காட்சியினை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது;
மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, இங்கு அவர்களால் தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்கள் 30 அரங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொருள்கள் தயாரிப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்ட விழிப்புணர்வு கண்காட்சி 40 அரங்குகளை கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 8 தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பு முகாம், சிறப்பு வங்கிக் கடன் முகாமும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்கள் மிகவும் தரமானதாக உள்ளது பாராட்டுக்குரியது. எனவே, பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கி, அவர்களுக்கு உதவிட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் நம்மை சுற்றி பள்ளி செல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்து, கல்வி பயில அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஓரல் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை சந்தித்து, பிளஸ் 2 வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி விசித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பள்ளியிலிருந்து கண்காட்சியினை காண வந்திருந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளுடன் கலந்துரையாடினார் ஆட்சியர். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.