அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, ‘இ – மார்க்கெட்’ எனப்படும், ‘ஆன்லைன்’ வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, ‘எல்காட்’ வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ – மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ – மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ – மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.