சென்னை: ”முக்கிய நகரங்களில், மின் கம்பத்திற்கு பதிலாக, தரைக்கு அடியில் கேபிள் பதித்து, மின் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, எரிசக்தி துறை செயலர், நசிமுதீன் தெரிவித்தார்.தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘டேன் எனர்ஜி – 2018′ என்ற கருத்தரங்கம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், எரிசக்தி துறை செயலர் நசிமுதீன் பேசியதாவது:’கஜா’ புயலால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் 200 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் பாதிப்பை தடுக்க, முக்கிய நகரங்களில், மின் கம்பத்திற்கு பதிலாக தரைக்கு அடியில் கேபிள் பதித்து, அதன் வாயிலாக மின் சப்ளை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், மொத்த மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு, 80 – 90 சதவீதம் என்றளவில் இருக்கும், என்றார்.