சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும், அவசர கால சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை முறைகளை, நிடி ஆயோக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. உடலுறுப்பு தானம் வழங்குவதிலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும் சிறந்து விளங்குகிறது.இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில், அவசர கால சிகிச்சை பிரிவு, எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய, வெங்கட் நாராயணன் தலைமையில், நிடி ஆயோக் குழுவினர், தமிழகம் வந்துள்ளனர். அவர்கள், கடலுார், தாம்பரம், சென்னை அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்துள்ளனர்.இது குறித்து, குழுவினர் கூறியதாவது:அவசர கால சிகிச்சை பிரிவுகள் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்கிறோம். முதற்கட்டமாக, தமிழக மருத்துவமனைகளில் தரப்படும் சிகிச்சைகள், கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். மேலும், சில மாநிலங்களிலும், ஆய்வு பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.