கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் நோயாளிகளுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் திங்கள்கிழமை (டிச.17) முதல் நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண் புரை நோயாளர்களுக்கு, அதிநவீன முறையிலான மிகவும் மேம்படுத்தப்பட்ட கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை தற்போது செய்யப்பட்டு வருகிறது.
இந்த புதிய முறையில் கண்புரை நோயாளரின் கண்களில் உள்ள பழுதான லென்ஸ்களுக்கு பதிலாக புதிய லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு பார்வை மிக தெளிவாக கிடைக்கிறது. மிக கடினமான கண்ணாடி அணிய வேண்டியதில்லை, மேலும் ஒரு வாரத்துக்குள் நமது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அதிநவீன கண் லென்ஸ் பொருத்தும் முகாம், திருப்பதிசாரம் படிப்பகத்தில் டிச.17 ஆம் தேதியும், செம்பருத்திவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 ஆம் தேதியும், கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 19 ஆம் தேதியும், பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 19 ஆம் தேதியும், முன்சிறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27 ஆம் தேதியும், நடுவூர்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 29 ஆம் தேதியும் நடைபெறும். முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இத்திட்டத்தின்கீழ் அனைத்து கண்புரை நோயாளர்களுக்கும் இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கு அடுத்த நாளே தங்கள் இல்லங்களுக்கு அரசு வாகனத்திலேயே கொண்டு விடப்படுவர்.
மேலும் கண்புரை சிகிச்சைக்கு நேரில் வரமுடியாதவர்கள் ஒரு சில நாள்களுக்கு முன்னதாக தங்கள் வட்டாரத்திலுள்ள நலப்பணியாளர்களை தொடர்பு கொண்டால் அரசு வாகனங்களிலேயே அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். கண்புரை நோயாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.