பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமராசர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 1,197 மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவசத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழைப் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற மனநிலையை மாற்றி அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலவழிக் கல்வியை சிறப்பாக வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வைப் பொறுத்தவரை பயிற்சிக்காக கால அவகாசம் தரப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் நீட் பயிற்சிகளில் மாணவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக மாணவர்களிடம் எந்த ஒரு சுணக்கமும் இல்லை. இப்பயிற்சிக்கு, 12-ஆம் வகுப்பு முடித்த 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்மூலம், நீட் தேர்வு எழுதுவதற்கு 400 பயிற்சி மையங்கள் உள்ளன. இதன்மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்.
நாட்டிலேயே முதல் முறையாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம், ஆதார் எண், கியூஆர் குறியீடு மூலம் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் நன்னடத்தையை மேம்படுத்தும் வகையில் முந்தைய காலங்களைப் போல் நீதிபோதனை வகுப்பில் நன்னெறி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, காஞ்சி காமாட்சியம்மன் கோயில், சங்கர மடம், ஏகாம்பரநாதர் கோயில், தேரடி ஆஞ்சநேயர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அவர் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் எம்எல்ஏ-க்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, பன்னீர் செல்வம்,முன்னாள் பேரூராட்சி தலைவர் அக்ரி நாகராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.