குறிப்பாக, தமிழ்நாட்டின் இசையும், இசைக்கலைஞர்களும் முதன்மைப் பெற்று விளங்குகின்றனர். இறைவனை வழிபாடு செய்ய மிகச் சிறந்த கருவியாக நம் முன்னோர்கள் கருதியது இசையைத் தான். பேச்சுமொழி எங்ஙனம் தமிழோ, அதுபோல இசையும், இசைப்பாடல்களும், தமிழ்நாட்டில் மிகுந்து காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தொல்காப்பியத்திலும்இசைச்செய்திகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இசை, நாட்டியம், இசைக்கருவிகள் செய்யும் முறை, வாசிக்கும் முறை என்று ‘இசைக்களஞ்சியமாக’ சான்றுகள் உள்ளன. பக்தி இலக்கியம் தோன்றிய காலம் எனப்படும் 7ம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் போன்றோர் தமிழிசையால் இறைவனை வழிபட்டனர். பின்னர் தோன்றிய பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. இதில் இசை நுணுக்கங்கள் பற்றிய குறிப்புகள் மிகுந்து உள்ளன.