ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கு வந்து ஆதார் பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இணை உணவை வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையைத் தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்த அங்கன்வாடி பணியாளர்களின் பயன்பாட்டுக்காக பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட செல்லிடப்பேசி அளிக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தைத் துவக்கும் அடையாளமாக 5 பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
பிறந்த குழந்தையின் முதல் ஆயிரம் நாள்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும்.
ஆதார் பதிவுகள்: குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கும் பணிகள் இனி அங்கன்வாடி பணியாளர்கள் வழியாகவே மேற்கொள்ளப்படும். இதற்காக, 434 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதி ஏற்படுத்தும் வகையில், ஆயிரத்து 302 ஆதார் கருவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய வீடுகளுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் வசிக்கும் கிராமத்திலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவுகள் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.