லண்டன் : பிரிட்டனில் விவசாயத்தில் ரோபோக்களை களமிறக்க தீவிர ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதைச் செய்வது, ஒரு பல்கலைக்கழகமாக இருந்தால், வெறும் ஆராய்ச்சியோடு நின்றுவிடும்.
ஆனால், விவசாய ரோபோக்கள் மீது ஆர்வம் காட்டுவது, பிரபலமான சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் கடையான, வெய்ட்ரோஸ் அண்ட் பார்ட்னர்ஸ். தங்கள் கடைகளுக்கு, விளை நிலத்திலிருந்து வேகமாக, சிக்கனமாக வேளாண் பொருட்களை விளைவித்து எடுத்து வர, விவசாய ரோபோக்கள் உதவும் என, அந்நிறுவனம் நினைக்கிறது.
இதற்கென, ‘ஸ்மால் ரோபோட் கம்பெனி’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்திடம், விதைத்தல், களை எடுத்தல் மற்றும் வயல்வெளியை கண்காணித்தல் ஆகிய மூன்று வேலைகளைச் செய்யும் ரோபோக்களை, தயாரித்துத் தரும்படி கேட்டிருக்கிறது, வெயிட்ரோஸ்.
அதற்கேற்றபடி, டாம், டிக் மற்றும் ஹாரி என்ற மூன்று ரோபோக்களை பரிட்சார்த்த முறையில் வடிவமைத்து, பிரீட்டனிலுள்ள ஹாம்ப்சையரில், 2.5 ஏக்கர் நிலத்தில் வெள்ளோட்டம் பார்த்து வருகிறது, ஸ்மால் ரோபோட் கம்பெனி. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆராய்ச்சி செய்து, விவசாய ரோபோக்களை உருவாக்கிவிட முடியும் என்கின்றனர், ரோபோ நிறுவன அதிகாரிகள்.ஹாரி ரோபோ துல்லியமாக நிலத்தில் விதைக்க பயன்படும். டிக் ரோபோ, இயந்திரக் கண்கள் மூலம் பார்த்து, களைகளை மட்டும் லேசர் கதிர்களால் பொசுக்கிவிடும்.
டாம் ரோபோ, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம், வயலில் உள்ள ஒவ்வொரு கோதுமை பயிரையும் நினைவில் வைத்து, அவற்றிற்கு, நீர், சத்துக்கள் போன்றவை கிடைத்திருக்கிறதா; பூச்சிகள் வந்திருக்கிறதா என்பதையெல்லாம் கண்டறிந்து, மற்ற ரோபோக்களை அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கப் பணிக்கும்.
ரோபோக்களுக்கு சம்பளம் கிடையாது. 24 மணி நேரமும் வயலே கதியாக இருக்க முடியும். எனவே அதிக செலவில்லாமல், செமையாக அறுவடை பார்க்கலாம் என, வெயிட்ரோஸ் கடை முதலாளிகள் காத்திருக்கின்றனர்.