சென்னை, ”புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ள தால், ‘ஜிசாட் – ௭ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், ஆறு மாதங்கள் அதிகரிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர், சிவன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:’ஜி.எஸ்.எல்.வி., – எப்11′ ராக்கெட் வாயிலாக, ‘ஜிசாட் – 7ஏ’ என்ற செயற்கைக்கோளை, வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம். ‘ஜிசாட் – 7ஏ’ செயற்கைக்கோளால் நிறைய பலன்கள் உள்ளன. தற்போது ஏவப்பட்ட, ‘ஜி.எஸ்.எல்.வி., – எப்11’ ராக்கெட்டில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நிலைகளில், புதிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.இதனால், செயற்கைக்கோளின் வாழ்நாள், ஆறு மாதங்கள் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு, பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.மீனவர்களுக்கான வழிகாட்டும் செயலி, தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி, மீனவர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், அதன் செயல் திறன் மேம்படுத்தப்படும்.இவ்வாறு சிவன் கூறினார்.