கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2018-19ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியாளர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இப்போட்டிகள், நாகர்கோவில் வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன. 22இல் தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தடகளம், கூடைப்பந்து, கபடி, இறகுப்பந்து, மேஜைப்பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் இருபாலரும், கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகளில் ஆண்களும் பங்கேற்கலாம். இதில், முதல் 2 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு சான்று வழங்கப்படும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் பங்கேற்கலாம்.
சீருடைப் பணியாளர்கள், தினக்கூலி அடிப்படை பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், 6 மாதத்துக்கு குறைவாக பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர் பங்கேற்க முடியாது.
மாவட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். மேலும், விவரங்களுக்கு, 04652-232060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.