பாரம்பரியம் காக்க அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே ஏற்படுத்த தபால் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் கடிதம் அனுப்ப பயன்படுத்தபட்ட தபால் பெட்டி குழித்துறை மற்றும் இரணியல் பகுதியில் இருந்தது.
இரணியலில் இருந்த தபால்பெட்டி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் எதிரே பீடம் அமைத்து வைக்கப்பட்டது.
இந்த தபால் பெட்டியை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து முதல் வாழ்த்து அட்டையை அனுப்பினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் சார்-ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், பத்மநாபபுரம் சார்- ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, டிஎஸ்பி பாஸ்கரன், அஞ்சல் துறை ஆய்வாளர் கணபதி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் அனைவரும் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. தற்போது இணையதளங்களின் வளர்ச்சி காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மக்களிடையே குறைந்து விட்டது. பாரம்பரியம் காக்க நாம் அனைவரும் கடிதம் எழுத பழகவேண்டும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் குறித்த வாழ்த்து அட்டைகள் பிரிண்ட் செய்து இங்குள்ள அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வைத்துள்ளோம். அதை அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம் என்றார் அவர்.