சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனிவாச ராமானுஜன் 16-வது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழக முனைவர் யீபெங் லியு மற்றும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜாக் தோர்ன் ஆகியோர் நிகழாண்டுக்கான சீனிவாச ராமானுஜன் விருதைப் பகிர்ந்து கொண்டனர். பத்தாயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை மற்றும் விருது பட்டயத்தினை உள்ளடக்கிய இந்த விருதை டாடா ரியால்டி நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் வேலன் வழங்கினார்.
பின்னர் வேலன் பேசுகையில், சீனிவாச ராமானுஜனின் சாதனைகளைப் போற்றும் இப்புனிதப் பணியில் தங்களது நிறுவனமும் சேர்ந்து பங்களிக்கும். உலகளவில் கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் பீல்டு மெடலைப் பெறுவதற்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது முன்னோடியாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இவ்விருதை முன்னர் பெற்ற மஞ்சுள் பார்கவா, டெர்ரன்ஸ் டோவ், அக்சய் வெங்கடேஷ், பீட்டர் சால்வ்ஸ் ஆகியோர் பீல்ட் மெடலைப் பெற்றனர். இவ்வகையில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது கணிதத் துறையில் முக்கியப் பரிசாக மாறியுள்ளது என்றார் அவர்.
விருது பெற்றவர்கள் தங்களது ஏற்புரையில், இந்த மாநாட்டுக்கு வந்த பிறகு சீனிவாச ராமானுஜன் பிறந்த கும்பகோணம் நகரில் மனதளவில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்தன என்றும், இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தினர் கணிதத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினர்.
விருதுக் குழுத் தலைவரும் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியருமான கிருஷ்ணசாமி அல்லாடி பேசுகையில், இவ்விருது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் சீனிவாச ராமானுஜனின் எண்ணியலில் சிறப்பான ஆய்வு செய்த 32 வயதுக்குட்பட்ட கணிதவியல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்க கணிதவியல் சமூகமும் தனது ஜனவரி 2019 ஆம் ஆண்டு பதிப்பில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது பற்றிய வரலாறு மற்றும் விருது பெற்றவர்களின் விபரம் ஆகியவற்றை பிரசுரித்து இவ்விருதைக் கெளரவப்படுத்தியுள்ளது. மேலும் லண்டன் ராயல் சொசைட்டியும் இவ்விருதைப் பெருமைப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
முன்னதாக விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்ய சுப்பிரமணியம் வரவேற்றார். சீனிவாச ராமானுஜன் மையப் புலத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் 11 கணிதப் பேராசிரியர்கள் உரையாற்றினர். மேலும் 200-க்கும் அதிகமான ஆய்வு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அமர்வில் பேராசிரியர்கள் யீபெங் லியு, ஜாக் தோர்ன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றுகின்றனர்