நாகர்கோவிலில் சனிக்கிழமை (டிச. 29) மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் மருத்துவர் தேவபிரசாத் ஜெயசேகரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது:
குமரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாரத்தான் 2018 போட்டிகள் டிச. 29ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கன்னியாகுமரி காந்திமண்டபம் முன்பிருந்து 21 கி.மீ. தூர போட்டிகள் தொடங்கி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெ”றுகிறது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்கலாம்.
இதேபோல் 10 கி.மீ. போட்டிகள் காலை 6 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இதில் ஆண்கள், பெண்கள், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 5. கி.மீ. தூர ஓட்டம் காலை 6.30 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கிலிருந்து தொடங்கி அங்கேயே நிறைவடைகிறது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தங்கள் பெயரை www.kanyakumarimarathon.org-இல் பதிவு செய்ய வேண்டும்.
இப்போட்டியில் மாநில தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலர் சி. லதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும், 21 கி.மீ. தூர ஓட்டத்தில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.
பேட்டியின்போது, குமரி மாவட்ட தடகள சங்கத் தலைவர் பிரவீன் மாத்யூ, செயலர் காட்வின் ஜான்ராஜன், பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.