உடுமலை:”ராணுவ பள்ளிகளில், மாணவியரையும் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, ராணுவ துணை தளபதி அன்பு கூறினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியின், 57வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, இந்திய ராணுவத்தின் துணை தளபதி, அன்பு அளித்த பேட்டி:
இந்தியா முழுவதும், 27 மாநிலங்களில், ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன. கட்டமைப்பு, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சிறப்புகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன், தன்னம்பிக்கை காரணமாக, அமராவதி நகர் சைனிக் பள்ளி, சிறந்த பள்ளியாக உள்ளது.
வட மாநிலங்களில், எல்லை காக்கும் பணி, போர், பாதுகாப்பு என ராணுவத்தின் செயல்பாடுகளை, மக்கள் நேரில் பார்க்கின்றனர். அதனால், அதிகளவு ராணுவத்தில் இணைகின்றனர். தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.ராணுவ வீரர்கள் மட்டுமன்றி, அதிகாரிகள் பணியிடங்களுக்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.
மத்திய அரசு வாரிய தேர்வுகள், ராணுவத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.ராணுவ பள்ளிகளில், மாணவியர் சேர்க்கை, இதுவரை இல்லை; பணியாற்றுவோரின் குழந்தைகள் சிலர் படிக்கின்றனர். தற்போது, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிகாட்டுதல் அடிப்படையில், பரீட்சார்த்த முறையில், மணிப்பூர் மாநில சைனிக் பள்ளியில், மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரும் காலங்களில், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும், மாணவியரை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.