கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே அடிப்படை வாசிப்பு தகுதியை பெற்றுள்ளனர். அத்துடம் 50% மேற்பட்ட மாணவர்கள் அடிப்படை கணக்குகளான, வகுத்தல் கூட தெரியாதவர்களாக உள்ளனர்.
2008ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டில், சுமார் 12% விகிதம் மாணவர்களின் கல்வித்திறன் குறைந்துள்ளது. 2008ல் 8ஆம் படித்த மாணவர்களில் 84% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 72.8% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.
அத்துடன் கடந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, வயது வாரியாக படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2018ல் 15-16 வயதுகளில் படிப்படை நிறுத்தியவர்களில் 13.5% மாணவிகளும், 12.6% மாணவர்களும் உள்ளனர். அத்துடன் 11-14 வயது மாணவர்களில் 4.1 மாணவிகளும், 3.3% மாணவர்களும் படிப்பை நிறுத்துகின்றனர். இந்த அளவில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 8.9% மாணவர்களின் கல்வித் திறன் குறைந்துள்ளது. 2008ல் 5ஆம் படித்த மாணவர்களில் 53% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 44.2% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 50.2% மாணவர்கள் வகுத்தல் தெரிந்தவர்களாகவும், கழிவறைகள் பயன்படுத்தும் மாணவர்கள் 71.0% ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கல்வித்திரன் அதிகம் கொண்ட மாணவர்களை கொண்ட மாவட்டங்களாக ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை திகழ்கின்றன. தமிழகத்தில் 2ஆம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கும் திறன் கொண்ட 5ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 46.3% ஆகவும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் வகுத்தல் கணக்கு தெரிந்தவர்கள் 27.1% ஆகவும் உள்ளனர். உடற்கல்வி வகுப்புகளை கற்கும் மாணவர்கள் தமிழகத்தில் 82% பேர் உள்ளனர். அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவை பொருத்தவரையில் தமிழக மாணவர்கள் 90% வருகைப் பதிவை பெற்றுள்ளனர்