சென்னை ‘ஸ்வயம்’ என்ற, ‘ஆன்லைன்’ படிப்பின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து கல்லுாரிகளுக்கும், தமிழக உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற படிப்புகளை, மாணவர்கள் படிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், ‘ஸ்வயம்’ என்ற, ஆன்லைன் படிப்பு முறை, அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த படிப்புகள், இணையதளத்தில், ‘வீடியோ மற்றும் ஆடியோ’ வழியாகவும், ‘டிஜிட்டல்’ புத்தகங்கள் வழியாகவும் நடத்தப்படுகின்றன.சென்னை, ஐ.ஐ.டி., உட்பட, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை உள்ளிட்ட தொழில்நுட்ப பல்கலைகள் வழியாக, இந்த படிப்புகளுக்கான பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், வெளிநாட்டு பேராசிரியர்களும், வீடியோ பாடங்களை தயாரித்து, இத்தகைய, ஆன்லைன் படிப்புக்கு வழங்கியுள்ளனர்.சில நேரங்களில், நேரடி ஒளிபரப்பாகவும், இணைய தளங்களில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான சான்றிதழ்களை, கல்லுாரிகளில், ‘ரெகுலர்’ வகுப்புக்கு இணையாக எடுத்துக் கொள்ள, மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆன்லைன் படிப்புகளில், கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களை, அதிக அளவில் பங்கேற்க வைக்குமாறு, மாநில உயர் கல்வி துறைக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., கடிதம் அனுப்பி உள்ளது.இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தமிழக உயர் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், ‘மாணவர்கள், விருப்பமான பாடங்களை படிக்கும் வகையிலும், போதிய மதிப்பெண் எடுக்கும் வகையிலும், ‘ஆன்லைன்’ படிப்பு குறித்து, அவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘இந்த படிப்புகளில், அதிக அளவில் சேர வழிகாட்ட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.