திருப்பூர்:பொதுத்தேர்வு துவங்க இன்னும், 36 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பு காட்ட துவங்கியுள்ளது.மார்ச், 1ல் பிளஸ் 2; மார்ச், 6ல் பிளஸ் 1; 14ல் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு துவங்குகிறது. இத்தேர்வை எழுதவுள்ள திருப்பூர் மாவட்ட மாணவர்களின் இறுதி பட்டியல் தயாராகியுள்ளது.அதன்படி, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வை, 25 ஆயிரத்து, 352 பேர் எழுதுகின்றனர்.
கடந்தாண்டை விட, 533 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வை, 25 ஆயிரத்து, 388 பேர் எழுதினர். நடப்பாண்டு, 801 மாணவர்கள் குறைவாக, 24 ஆயிரத்து, 587 பேர் எழுதுகின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்தாண்டு, 77 மையங்களில் நடந்தது. நடப்பாண்டு காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி என, இரு தேர்வு மையங்கள் அமைக்க கூடுதலாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 79 மையங்களில் தேர்வு நடக்கவுள்ளது.திருப்பூர் வட்டாரத்தில், நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 7,883 மாணவர், 7,984 மாணவிகள் என, 15 ஆயிரத்து, 867 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாவட்டத்தில், 92 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த, 2017- 18ம் கல்வியாண்டில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றது. தேர்ச்சி சதவீதம், 96.18. ஏழாவது இடத்தில் இருந்த திருப்பூர் ஒரே ஆண்டில், நான்கு இடங்கள் முன்னேறி, மூன்றாவது இடத்தை கடந்தாண்டு பெற்றது.நடப்பாண்டு முதல் இடத்தை பெறுவதை இலக்காக கொண்டு, ஒவ்வொரு தலைமை ஆசிரியர் செயல்பாடுகள், பள்ளியில் அவர்கள் பணிபுரியும் திறன் குறித்து தனியே கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பள்ளிகள் பெற்ற சதவீதம், தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் நடப்பாண்டு பெற வேண்டிய இலக்கு நிர்ணயித்து அதற்கான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.’முதலிடமே இலக்கு!’பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது:பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி சதவீதத்தை எட்ட, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியரிடம் நேரடியாக பேசி கல்வியில் பின்தங்கும் பொதுத்தேர்வு எழுதும் மாணவரின், பெற்றோரை அழைத்து குறைகளை கேட்டறிந்து, அவர்களும் தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.முழு வீச்சில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். விடைகளை தவறின்றி எழுதுவது, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது குறித்து உரிய அறிவுரை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.