சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்த பெண், குரூப்-1 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 1 பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி தேசி அழகன் மகள் இளவரசி (27) மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 2 வரை தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது பள்ளியில் மூன்றாமிடம் பிடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். பொறியாளர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க குரூப்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, உள்ளாட்சித் தணிக்கைத் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், குரூப்-1 தேர்வு எழுதி மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், துணை ஆட்சியராகப் பொறுப்பேற்று, ஏழை மக்களுக்கு சேவை புரிவேன். குரூப்-1 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.