பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் அமலாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய மருத்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படாதவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை அதிகரிக்க முடியாது. இதனால் நிகழாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. 2020ஆம் கல்வியாண்டு முதல்தான் அமலாக வாய்ப்புள்ளது’ என்றன.
நாடு முழுவதும் 450 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 55,000 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படுவதால், கூடுதலாக சுமார் 16,000 இடங்கள் உருவாகும் எனத் தெரிகிறது.