awards1 2014-ஆம் ஆண்டு வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்காக தில்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருதை வழங்குகிறார் அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார்.
பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழா தில்லி கமானி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர் கம்பார் தலைமை வகித்தார். செயலர் கே.ஸ்ரீநிவாச ராவ் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருதை அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார் வழங்கினார். 2014-ஆம் ஆண்டு வெளியான அவரது “சஞ்சாரம்’ என்ற நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளர் ரமேஷன் நாயருக்கு மலையாளத்துக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவர் எழுதிய குருபௌர்ணிமா கவிதை நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
முக்கியத்துவம் பெறும் திருக்குறள்: நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல ஒடியா எழுத்தாளர் மனோஜ் தாஸ் பேசுகையில், “இந்தியாவில் உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். உலகில் பெரும்பாலான நாகரிகங்கள் உருவாகாத காலத்தில், அதாவது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக அறக் கருத்துகளைக் கூறும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். உலகின் பெரும்பாலான ஆதி இலக்கியங்கள் அப்போது எழுதப்படவில்லை. உலகில் தோன்றிய ஆதி இலக்கியங்களில் திருக்குறள் முக்கியம் பெறுகிறது’ என்றார்.
தமிழ் அன்னைக்கு நன்றி: மலையாளத்துக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற ரமேஷன் நாயர் தினமணிக்கு அளித்த பேட்டியில், “தமிழும் மலையாளமும் எனது இரு கண்களாகும். தமிழின் ஆதி இலக்கியங்களான சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்துள்ளேன். தமிழ் என் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் பிண்ணிப் பிணைந்திருந்தது. தமிழ் அன்னைக்கு நன்றி’ என்றார்.
“இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் இந்திய இலக்கியங்களைப் பிரிக்க முடியாது’
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இந்திய இலக்கியங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது என்று இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தன் கூறினார். சாகித்ய அகாதெமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட அவர் தினமணியிடம் கூறுகையில், “பெரும்பாலான இலங்கைத் தமிழர்களைப் போல, எனது வாழ்க்கையிலும் இந்திய இலக்கியங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் உள்ளிட்டவை இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியம் பெறுகின்றன. கல்கி, கலைமகள் உள்ளிட்ட வார இதழ்களும் எனது வாழ்வில் முக்கியம் பெறுகின்றன. சங்க இலக்கிய ஈழத்து கவிஞர் ஈழத்து பூதன் தேவனார் தொடக்கம் சமகால எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் வரை ஈழத்து இலக்கியத்துக்கு தனி மரபு உண்டு’ என்றார்.