மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் முறையை நடைமுறைக்குக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக் குழு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017-ஆம் ஆண்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, விருப்பப் பாடத் தேர்வு முறையும் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் படிக்க முடியும். மேலும், இந்த புதிய கல்வித் திட்டத்தின்படி, அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு பருவத் தேர்வில் பாடங்களில் தோல்வியடையும் மாணவர், அடுத்து வரும் தேர்வில் அவர் தோல்வியடைந்த பாடத்துக்கான தேர்வை எழுத முடியாது. மீண்டும் அந்தப் பாடத்துக்கான தேர்வு எந்தப் பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.
மாணவர்கள் போராட்டம்: இந்தப் புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை அண்மையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 2017 கல்வித் திட்ட நடைமுறைகளைக் கைவிடவேண்டும் என வழியுறுத்தினர்.
அப்போது, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழகப் பதிவாளர் குமார் தலைமையிலான பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 2017 கல்வித் திட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எந்தவொரு மாற்றமும் கிடையாது: இதற்கிடையே, பல்கலைக்கழக கல்வித் திட்டத்திலோ அல்லது தேர்வு நடைமுறையிலோ அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவரவில்லை.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே, பொறியியல் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. எனவே, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, தேர்வு முறையிலே அல்லது கல்வித் திட்டத்திலோ எந்தவித மாற்றமும் செய்யப்படாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா திட்டவட்டமாக அறிவித்தார்.
மீண்டும் அரியர் முறை: இந்த நிலையில், பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியதாவது:
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் முதல் பருவத் தேர்விலிருந்து வைக்கும் அரியர் தாளை எந்த பருவத் தேர்விலும் சேர்த்து எழுதிக்கொள்ள அனுமதிப்பது என கல்விக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், பொறியியல் கல்வித் தரத்திலோ, பிற நடைமுறைகளிலே எந்த மாற்றம் செய்யப்படாது.
பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறும் ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்ட உடன், இந்த புதிய நடைமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.