மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ரூ.50 கோடியில் உருவாக உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழுமத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் உயர்கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உயர்கல்வியில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் நிதியுதவியும் வழங்கி வருகிறது. இதில் தேசிய உயர்கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
இந்த நிதியின் மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தானியங்கி வசதிகளைக் கொண்ட நூலகம், பல்கலைக்கழகத்தில் 20 துறைகளில் 80-க்கும் மேற்பட்ட பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறைகள், பல்கலைக்கழக மருத்துவமனையை நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தல், பல்கலை. நிர்வாகத்தில் மின்னணு நிர்வாக நடைமுறையை அமல்படுத்துதல், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் “வை பை’ வசதி ஏற்படுத்துதல் ஆகியவை செய்து முடிக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய மனித வளமேம்பாட்டுத்துறையின் சார்பில் ஆய்வுக்குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து தேசிய உயர்கல்வி மேம்பாட்டுக்குழுவின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்படி பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் ரூ.50 கோடியில் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்குழுமம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் உள்ள சர் சி.வி.ராமன் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டு குழுமத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது: மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தின் கீழ் காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுமம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் ஆய்வு, மாணவர்களின் திறன் மேம்பாடு, உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்தும் உதவி, பல்வேறு இந்திய மற்றும் அந்நிய மொழிகள் தொடர்பான திறனை மேம்படுத்துதல், “மேக் இன் இந்தியா’, “ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவித்தல், சுகாதாரத்துறையில் தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் மூலம் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 110 கல்லூரிகளியில் பயிலும் 8 ஆயிரம் மாணவர்கள் பயன்அடைவர். இந்த திட்டத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன்: தொழில் முனைவோர் மேம்பாட்டுக்குழுமம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனமாக மாற்ற உதவும். படிக்கும் காலத்திலேயே மாணவர்களை தொழில்முனைவோராக மாற்ற உதவும் இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு வளமான தமிழகம் உருவாக முனைய வேண்டும் என்றார்.
விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் வி.சின்னையா, உயிரி அறிவியல் துறைத்தலைவர் எம்.ஹுசைன் முனவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் இ.வி.ரிஜின், கல்வியல் புலத்தலைவர் ஏ.முத்துமாணிக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.