திருவண்ணாமலை: கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற, 10 மாணவியர், நேற்று, ஒரு நாள் முழுவதும் கலெக்டர் கந்தசாமியுடன் பயணித்து, அவரது பணியை பார்வையிட்டனர்.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்பதை வலியுறுத்தி, 2018, டிச., 20ல், கடிதம் எழுதும் போட்டியை, மாணவியருக்கு நடத்தியது.இதில், ‘உயர் கல்வி படிக்க வேண்டும், இளம் வயதில் திருமணம் செய்வதை கைவிட வேண்டும், ஆண்களை போல், பெண்களுக்கும் சுதந்திரமாக, சுயமாக, முடிவெடுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, மாணவியர் கடிதம் எழுதினர்.மாவட்டத்தில் உள்ள, 2,508 பள்ளிகளில், 1.95 லட்சம் மாணவியர், ஒரே நேரத்தில், தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர்.சிறப்பாக கடிதம் எழுதிய, 10 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, நேற்று, ஒரு நாள் முழுவதும், கலெக்டர் கந்தசாமியுடன், காரில் பயணித்து, அவரது பணியை அறிந்து கொண்டனர்.